மாவட்டத்தில் பலத்த மழை பெண்ணாடத்தில் 2 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


மாவட்டத்தில் பலத்த மழை பெண்ணாடத்தில் 2 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 14 July 2021 10:36 PM IST (Updated: 14 July 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. பெண்ணாடத்தில் 2 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.


கடலூர், 

பலத்த மழை

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை, இரவில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. ஆனால் நேற்று காலை முதலே கடலூரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 6 மணியளவில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் 6.30 மணியளவில் லேசான தூறலுடன் பெய்யத்தொடங்கிய இந்த மழை சிறிது நேரத்தில் பலத்த மழையாக கொட்டத்தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் இந்த மழை நீடித்தது. இந்த மழையால் சாலையில் சென்ற பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. 

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

இதேபோல் ஸ்ரீமுஷ்ணம், பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதில் பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட கருங்குழி தோப்பு பகுதியைச் சேர்ந்த திருவள்ளுவன், இளையராஜா ஆகியோரின் கூரை வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அவர்கள் தண்ணீரை வெளியேற்றினர். மேலும் பஸ் நிலைய பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. 

Next Story