உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்
உளுந்தூர்பேட்டை
வாரச்சந்தை
உளுந்தூர்பேட்டையில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பேரூராட்சி சார்பில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு ஆடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி விழுப்புரம், கடலூர், சென்னை, திருச்சி, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் விவசாயிகளும் கூடுவார்கள். பண்டிகை காலங்களில் ஆட்டுச் சந்தையில் கூட்டம் அலைமோதும்.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக சந்தை இயங்கவில்லை. இந்த நிலையில் தற்போது கொரானா ஊரடங்கு கூடுதல் தளர்வுகளை அறிவித்த போதிலும் வாரச்சந்தைகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
ரூ.1 கோடிக்கு விற்பனை
இதற்கிடையே பக்ரீத் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் நேற்று உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ஆடுகளுடன் விவசாயிகளும், வியாபாரிகளும் திரண்டனர். இதனால் வியாபாரம் களை கட்டியது. உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள், விவசாயிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றி சென்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை ஆனதாகவும், ஒரு ஆட்டின் குறைந்தபட்ச விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.13 ஆயிரம் வரைக்கும் விலை போனதாகவும், மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story