போச்சம்பள்ளி பகுதியில் கருந்தலை புழு தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிப்பு-வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை


போச்சம்பள்ளி பகுதியில் கருந்தலை புழு தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிப்பு-வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 July 2021 10:45 PM IST (Updated: 14 July 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

போச்சம்பள்ளி பகுதியில் கருந்தலை புழு தாக்குதலால் தென்னை மரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்தூர்:
கருந்தலை புழு தாக்குதல்
போச்சம்பள்ளி தாலுகாவுக்குட்பட்ட அரசம்பட்டி, மஞ்சமேடு, முதுகாம்பட்டி, பென்றஹள்ளி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தென்பெண்ணை ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு அவற்றிற்கு நீர்பாசனம் செய்யப்பட்டு வருகிறது. 
இங்கு விளையும் தேங்காய்கள் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகத்திற்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் தென்னை நாற்றுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தநிலையில் தற்போது சமீப காலமாக தென்னை மரங்களை கருந்தலை புழு தாக்கி வருகிறது. இதனால் தோப்புகளில் உள்ள தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த புழு, தென்னை ஓலைகளில் உள்ள பச்சையத்தை உறிஞ்சுவதால், ஓலைகள் கருகி பரிதாபமாக காட்சியளிக்கின்றன. மேலும் தென்னை மரங்களும் பட்டு போய், தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. 
உரிய இழப்பீடு
பல்வேறு பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்தியும் இந்த கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே போச்சம்பள்ளி பகுதியில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேலும், இந்த புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story