தீயணைப்பு துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
தீயணைப்பு துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
அவினாசி,
அவினாசியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற பல ஆண்டு கால கோரிக்கையை ஏற்று கடந்த 2015-ம் ஆண்டு அவினாசி-மங்கலம் ரோட்டில் வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அவினாசி புதிய பஸ் நிலையம் அருகில் தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.1½ கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் தீயணைப்பு நிலைய கட்டிட வளாகத்திற்கு கம்பிவேலி அமைக்கப்பட்டது. இதையறிந்த பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார், அண்ணா பூபதி, ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், வார்டு உறுப்பினர் சண்முகம் உள்ளிட்ட பொதுமக்கள் அங்கு வந்து தீயணைப்பு நிலையம் கட்டும் இடத்திற்கு அருகில் மயானம் உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கைகாட்டிபுதூர், கமிட்டியார் காலனி, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதி மக்களின் மயானமாக பயன்பாட்டில் உள்ள நிலையில் மயானத்திற்கு செல்லும் வழிப்பாதையில் அமைத்துள்ள கம்பிவேலியை அப்புறப்படுத்த வேண்டும் என்று தீயணைப்பு துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறைக்காக மந்தை புறம்போக்கில் அரசு இடம் ஒதுக்கீடு செய்துள்ளது என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தகவலறிந்து பழங்கரை கிராம நிர்வாக அலுவலர் ராயப்பன் சம்பவ இடம் வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி, ஆவணப்படி அளவீடுகள் சரிபார்த்து உரிய தீர்வு காணலாம் என்று கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story