கூடலூரில் சாலைகளில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
கூடலூரில் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூரில் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலைகளில் தேங்கும் மழைநீர்
கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் மழைநீர் வடிகால்களை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் சாலைகளில் தேங்கி நிற்கின்றன.
கூடலூரில் இருந்து மலப்புரம், கோழிக்கோடு செல்லும் சாலையோரம் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
வடிகால்களை சீரமைக்க கோரிக்கை
இதேபோல் கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி எல்லமலை வரை செல்லும் சாலையோரம் பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் மற்றும் வாய்க்கால்கள் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளது.
மேலும் கூடலூர்- சுல்தான்பத்தேரி சாலையில் புஷ்பகிரி என்ற இடத்தில் இருந்து 1-ம் மைல் வரை சாலையோரம் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்கள் மண்மூடி, தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.
எனவே இந்த பகுதிகளில் வடிகால்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story