பெண் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் மனைவியை கொன்ற ஓட்டல் தொழிலாளி கைது


பெண் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் மனைவியை கொன்ற ஓட்டல் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 14 July 2021 11:28 PM IST (Updated: 14 July 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே பெண் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. மனைவியை கொன்ற ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். போலீசுக்கு பயந்து மொட்டையில் உலா வந்தபோது சிக்கினார்.

பேரூர்

கோவை அருகே பெண் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. மனைவியை கொன்ற ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். போலீசுக்கு பயந்து மொட்டையில் உலா வந்தபோது சிக்கினார். 

ஓட்டல் தொழிலாளி 

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதி ஜெயமங்கலத்தை சேர்ந்தவர்
பாண்டியராஜன் (வயது 38). இவருடைய மனைவி கலாமணி (வயது 35). இருவரும் தொண்டாமுத்தூர் வ.உ.சி வீதியில் வசித்து வந்தனர்.

 பாண்டியராஜன் அங்குள்ள ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக பாண்டியராஜன் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில், கடந்த 10-ந் தேதி காலை பாண்டியராஜன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. 

இதனால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

பெண் கொலை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது, பாண்டியராஜனின் மனைவி கலாமணி அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். 

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கலாமணியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர். 

கணவர் மாயம்

இதனிடையே, கலாமணியின் கணவர் பாண்டியராஜனை காண வில்லை. அவர் மாயமானது தெரியவந்தது. இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். 

அத்துடன் பாண்டிய ராஜனின் சொந்த ஊரான ஜெயமங்கலத்துக்கு தனிப்படை போலீசார் சென்றனர். பின்னர் அவரது பெற்றோர் மற்றும் உறவினரிடம் விசாரித்தனர். அப்போது அவர் அங்கு வரவில்லை என உறவினர்கள் தெரிவித்ததால், அங்கு போலீசார் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

பதுங்கி இருந்தவர் கைது 

இந்த நிலையில், பாண்டியராஜன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தனது நண்பரான கரகாட்ட கலைஞர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, தனிப்படை போலீசார், பெரியகுளம் போலீசார் உதவியுடன் நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த பகுதிக்கு சென்றனர்.

அப்போது அந்த வீட்டின் கதவு பூட்டுப்போட்டு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தேடினார்கள். அப்போது சமையலறையில் பதுங்கி இருந்த பாண்டியராஜனை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். 

பின்னர் அவரை போலீசார் பெரியகுளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை போலீசார் கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
 


Next Story