அரக்கோணத்தில் வயதான மூதாட்டியை சாலையோரம் விட்டுச்சென்ற மகன்


அரக்கோணத்தில் வயதான மூதாட்டியை சாலையோரம் விட்டுச்சென்ற மகன்
x
தினத்தந்தி 14 July 2021 11:30 PM IST (Updated: 14 July 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துசெல்வதாக கூறி மகன் சாலையோரம் விட்டுச்சென்றார். அவரை தொண்டு நிறுவனத்தினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அரக்கோணம்

மயங்கி கிடந்த மூதாட்டி

கொரோனா ஊரடங்கால் உணவு இன்றி இருக்கும் ஆதரவற்றவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு  திருவள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரக்கோணம் நகரில் அரக்கோணம் - சோளிங்கர் ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் நேற்று 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையோரத்தில் படுத்திருந்தார். 

இதனைகண்ட தொண்டு நிறுவன ஊழியர்கள் மதிய உணவு வழங்குவதற்காக மூதாட்டியை எழுப்பியபோது மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக தண்ணீர் தெளித்து எழுப்பி உணவு வழங்கி விசாரித்தனர்.

விட்டுச்சென்ற மகன்

அப்போது மூதாட்டியின் மகன் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்துவந்து இங்கு விட்டு சென்றதாக தெரிவித்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி அரக்கோணம் அடுத்த புதூர் கிராமத்திற்கு மூதாட்டியை உறவினர்களிடம் அழைத்து சென்றபோது அவருடைய மகன் இருக்கும் பட்சத்தில் தாங்கள் எதற்காக பராமரிக்க வேண்டும் என்று கூறி ஏற்க மறுத்தனர். 

இதனை தொடர்ந்து மூதாட்டியின் மகன் வெளியூரில் இருப்பதால் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தபோது தனது தாய் பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். அதனால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவரை எங்காவது ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள் என்று தெரிவித்தார். இதனால் போலீசார் மூலம் மூதாட்டியை தொண்டு நிறுவன ஊழியர்கள் சென்னையில் உள்ள காப்பகம் ஒன்றில் கொண்டு சேர்த்தனர்.

Next Story