ஒடுகத்தூர் அருகே மலைப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை தந்தம் யானை


ஒடுகத்தூர் அருகே மலைப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை தந்தம் யானை
x
தினத்தந்தி 14 July 2021 11:42 PM IST (Updated: 14 July 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

ஒடுகத்தூர் அருகே மலைப்பகுதியில் கோவிலுக்குசெல்லும் பாதையில் ஒற்றை தந்தத்துடன் யானை சுற்றித்திரிந்தது. அதை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

அணைக்கட்டு

ஒற்றை யானை

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் மலைப்பகுதிகள் உள்ளன. இதில் கருத்தமலை காப்புகாடு மற்றும் மேல் அரசம்பட்டு காட்டில் கடந்த 2014-15 ஆம் ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட யானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. சுமார் ஒரு மாதம் போராடி வனத்துறையினரும், பொதுமக்களும் யானைகளை விரட்டி அடித்தனர்.

இந்த நிலையில் ஒற்றை தந்த யானை ஒன்று தனியாக மலைப்பகுதியில் சுற்றி வருகிறது. இந்த யானை நேற்று குருவராஜபாளைய காப்புக்காட்டில் உள்ள தர்மராஜா கோவிலுக்கு செல்லும் வழியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது கோவிலுக்கு சென்ற பக்தர்கள் யானையை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அந்த யானையை விரட்டி அடித்தனர்.

விரட்டியடிப்பு

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில் ஒற்றை தந்தம்கொண்ட யானை சுமார் 40 ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் காப்பு காட்டிலும், குருவராஜபாளையம் காப்பு காட்டிலும் திரிந்து வருகிறது. இந்த ஒற்ற தந்த யானையால் விவசாயிகள், பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. மாம்பழ சீசனில் குருவராஜபாளைய காப்பு காட்டிலும், பலாப்பழம் காலத்தில் ஜமுனாமுத்தூர் காப்புக் காட்டில் வாழ்ந்து வருகிறது.

தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கிவிட்டதால் இந்த யானை குருவராஜபாளையம் காப்புக் காட்டில் இருந்து வெளியேற நேற்று அந்த வழியாக சென்று உள்ளது. அந்த யானை ஜமுனாமுத்தூர் காட்டுக்கு விரட்டி அடிக்கப்பட்டது என்றார்.

Next Story