நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற தாசில்தாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகன்
நாகர்கோவிலில் செலவுக்கு பணம் கொடுக்காததால் ஓய்வுபெற்ற தாசில்தாரை, அவரது மருமகன் கழுத்தை நெரித்து படுகொலை செய்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் செலவுக்கு பணம் கொடுக்காததால் ஓய்வுபெற்ற தாசில்தாரை, அவரது மருமகன் கழுத்தை நெரித்து படுகொலை செய்தார்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஓய்வுபெற்ற தாசில்தார்
நாகர்கோவில் சாந்தன்செட்டிவிளை பெரியநாடார் தெருவை சேர்ந்தவர் சிவதாணு (வயது 75), ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மனைவி இறந்து விட்டார். இவர்களுடைய மகள் நாமக்கல்லில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். எனவே வீட்டில் சிவதாணு, அவருடைய தங்கை மகன் விக்னேஷ் ராம் (36) என்பவருடன் வசித்து வந்தார். விக்னேஷ் ராமுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் அடிக்கடி வீட்டில் இருந்து வெளியேறி எங்கேயாவது சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூட விக்னேஷ் ராம் திடீரென வீட்டிலிருந்து மாயமாகி விட்டார்.
அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் விக்னேஷ் ராம் கோவைக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் ராமை கோவையில் இருந்து போலீசார் மீட்டு வந்தனர். பின்னர் விக்னேஷ் ராம், தனது தாய்மாமா சிவதாணு வீட்டிலேயே இருந்தார்.
கழுத்தை நெரித்து கொலை
இந்தநிலையில் நேற்று காலை தனக்கு செலவுக்கு பணம் வேண்டும் என சிவதாணுவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. விக்னேஷ் ராம் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் மாமா சிவதாணு மீது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. திடீரென அவரை காலால் மார்பில் மிதித்து கீழே தள்ளியதாக தெரிகிறது. எனினும் ஆத்திரம் தீராத அவர் சிவதாணுவை கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் சிவதாணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து செய்வதறியாது திகைத்த விக்னேஷ் ராம், மாமாவை கொன்று விட்ட தகவலை அனாதைமடம் பகுதியில் வசித்து வரும் தன்னுடைய தாயாருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், சிவதாணு வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்த சிவதாணு உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் அவர், கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
கைது
உடனே போலீசார் விரைந்து சென்று விக்னேஷ் ராமை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். மேலும் சிவதாணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செலவுக்கு பணம் கொடுக்காததால் தன் தாய்மாமாவையே விக்னேஷ் ராம் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்ராமை கைது செய்தனர்.
Related Tags :
Next Story