திருவாரூர் மாவட்டத்தில் புதிய ரோந்து பணி
திருவாரூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்களின் உயிர், உடமைகளை பாதுகாக்க புதிய ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்களின் உயிர், உடமைகளை பாதுகாக்க புதிய ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
இ-பீட் ரோந்து முறை
திருவாரூர் மாவட்டத்தில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் உயிர், உடமைகளை பாதுகாக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் புதிய முயற்சியாக இ-பீட் ரோந்து முறையை அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்காக போலீஸ் விழுதுகள் என்ற பெயரில் குழு அமைக்கப்பட்டு, அதற்காக ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த குழு மாவட்டத்தில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் விவரங்களை கணக்கெடுத்துள்ளனர்.
பாதுகாப்பு
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 72 ஆண்கள், 198 பெண்கள் என 270 மூத்த குடிமக்கள் தனியாக வசித்து வருகின்றனர். இதில் போலீஸ் உட்கோட்ட அளவில் திருவாரூரில் 53 பேரும், நன்னிலத்தில் 44 பேரும், மன்னார்குடியில் 102, திருத்துறைப்பூண்டயில் 38, முத்துப்பேட்டையில் 33 பேர் உள்ளனர். அனைத்து மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று சோதனை செய்து பாதுகாப்பினை உறுதிபடுத்தும் வகையில் இ-பீட் ரோந்து முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறியீடு
திருவாரூர் நகர் மேல சீதன கட்டளை பகுதியில் வசிக்கும் மூத்த குடிமக்கள் கிருஷ்ணம்மாள், ஜெகதம்பாள் ஆகியோர் வீடுகளில் கியூ ஆர் கோடு ஒட்டி இ-பீட் ரோந்து முறை திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இ-பீட் ரோந்து உருவாக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மூத்த குடிமக்களுக்கும் கியூ.ஆர் குறியீடு உருவாக்கப்பட்டு அந்த வீடுகளில் ஒட்டப்பட்டு, அவற்றை போலீஸ் அலுவலர்கள் வருகையின்போது ஸ்கேன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்களின் வீடுகளை போலீஸ் அலுவலர்கள் சரியான நேரத்தில் சோதனை செய்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படும்.
மேலும் இ-பீட் ரோந்து முறை திட்டத்தை மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் 270 இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story