பெரியகுளம் கண்மாய் நிரம்பியது


பெரியகுளம் கண்மாய் நிரம்பியது
x
தினத்தந்தி 15 July 2021 1:10 AM IST (Updated: 15 July 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக பெரியகுளம் கண்மாய் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக பெரியகுளம் கண்மாய் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
பெரியகுளம் கண்மாய் 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்த தொடர் மழையின் காரணமாக வத்திராயிருப்பை சுற்றியுள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஆதலால் இந்த கண்மாய்களில் தண்ணீர் இருப்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஆதலால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய பணியினை கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தொடர்மழையின் காரணமாக வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பெரியகுளம் கண்மாய் அதன் முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி அளிக்கின்றது.
விவசாயிகள் மகிழ்ச்சி 
இந்த பெரியகுளம் கண்மாயை நம்பி 800-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெல் மற்றும் தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கண்மாயில் தண்ணீர் வற்றாமல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தொடர்ச்சியாக பெய்த மழையினால் கண்மாய்களில் நீர் இருப்பு இருந்துகொண்டே இருக்கிறது. 
சாகுபடி பணி 
கண்மாய்களுக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும், நீர்இருப்பு இருப்பதாலும் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 
தற்போது விவசாயத்திற்கு உண்டான போதுமான தண்ணீர் கண்மாயில் இருப்பதால் ஆடி சாகுபடி செய்ய விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தை தயார் செய்து வருகின்றனர். ஆடி நெல் சாகுபடி கடந்த கோடை கால நெல் சாகுபடியை போல் அதிக விளைச்சலை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story