1,892 பேருக்கு ரூ.9.35 கோடியில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்


1,892 பேருக்கு ரூ.9.35 கோடியில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்
x

தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில் 1,892 பேருக்கு ரூ.9.35 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராஜா, பழனி நாடார், சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு, 1,892 பேருக்கு ரூ.9 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மக்கள் எதிர்பார்த்தது போன்று ஆட்சி அமைந்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற சிறிது காலத்தில் கொரோனா நோய்த்தொற்றை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதனால் தற்போது நோய்த்தொற்று குறைந்து பொதுமக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். 

எதிர்க்கட்சியினரும் பாராட்டும் வகையில் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். அனைத்து அமைச்சர்களையும் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்த உத்தரவிட்டு உள்ளார். எனது துறையின் கீழ் நானும் ஆய்வு செய்து வருகிறேன். இதனால் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண நல்ல வாய்ப்பாக உள்ளது.

விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பல்வேறு அரசுத்துறைகளும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றன. விடுபட்ட மாவட்டங்களில் நிச்சயமாக விரைவில் தேர்தல் நடைபெறும். 

தி.மு.க. ஆட்சியில் 240 சமத்துவபுரங்கள் இருந்தன. அவை சீரமைக்கப்படும். புதிதாகவும் சமத்துவபுரம் அமைக்கப்படும். ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதும் தி.மு.க.வின் நல்ல திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. தி.மு.க. ஆட்சியில் கல்வி, வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளிலும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் அருகே உள்ள மகாதேவர்பட்டியில் ரூ.1.73 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நிட்சேபநதி ஆற்றுப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நயினாபுரம் நெடுங்குளம் கால்வாயை ஆழப்படுத்தும் பணியையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பெண்களால் நடத்தப்படும் சாய் அச்சக தொழிற்கூடத்தை பார்வையிட்டார். பின்னர் மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த தானியங்கள், காய்கனி மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். தென்காசி வட்டாரத்தில் 600 பெண் விவசாயிகளை அடையாளம் கண்டு பெண் உழவர்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பெண் விவசாயிகளுக்கு பதிவு சான்றிதழை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

முன்னதாக கலிங்கப்பட்டி பகுதியில் வைத்து அமைச்சர் பெரியகருப்பனுக்கு கலிங்கப்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குடும்பத்தின் சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

இந்த நிகழ்ச்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மை செயலாளர் கோபால், இயக்குனர் பிரவீன் பி.நாயர், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை இயக்குனர் மரியம் பல்லவி பல்தேவ், தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன், மகளிர் திட்ட இயக்குனர் விஜயலட்சுமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் கருப்பண ராஜவேல், தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன், தென்காசி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தி.மு.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story