கே.ஆர்.எஸ். அணை பகுதியில் கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - நடிகை சுமலதா எம்.பி. வலியுறுத்தல்
மண்டியாவில் கே.ஆர்.எஸ். அணை பகுதியில் கல் குவாரி தொழிலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நடிகை சுமலதா எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
மண்டியா:
சுமலதா எம்.பி. நேரில் ஆய்வு
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் கிருஷ்ணராஜா சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கட்டு உள்ளது. இந்த அணையை சுற்றிய பகுதியில் செயல்படும் கல்குவாரிகளால் அணையில் விரிசல் ஏற்படுவதாக மண்டியா தொகுதி எம்.பி.யும், நடிகையுமான சுமலதா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கும், அவருக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் நடிகை சுமலதா எம்.பி. நேற்று கே.ஆர்.எஸ். அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் அணையின் மதகுகள், அணையின் பிரதான சுவர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தடை விதிக்க வேண்டும்
அதைதொடர்ந்து அவர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சட்டவிரோத கல் குவாரிகள் குறித்து அவர் விவாதித்தார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கே.ஆர்.எஸ். அணைக்கு ஆபத்து ஏற்படும் முன்பு அனைவரும் விழித்து கொள்வது அவசியம். அந்த அணையின் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் கல்குவாரி தொழிக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக கனிம வளத்துறை மந்திரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மைசூரு மகாராஜாக்களின் தியாகத்தால் கே.ஆர்.எஸ். அணை கட்டப்பட்டது. இந்த அணையை கட்டும் பணியில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
விரிசல் ஏற்பட்டது உண்மை
இத்தகைய சொத்தை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கே.ஆர்.எஸ். அணையில் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறுவது சரியாக இருக்காது. ஒருவேளை ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். மீண்டும் இத்தகைய அணையை கட்டமைப்பது சாத்தியமா?. கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டது உண்மை. அதை ரூ.67 கோடி செலவில் சரிசெய்தனர்.
அதிகாரிகள் நல்ல முறையில் பணியாற்றியுள்ளனர். ஆனால் அந்த அணையில் விரிசல் ஏற்பட்டது என்ற எனது கருத்தில் நான் உறுதியாக உள்ளேன். இந்த அணையை பாதுகாப்பது தொடர்பாக ஒரு செயல்படையை அமைக்க வேண்டும் என்று கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த செயல்படையில் அனைத்து துறை அதிகாரிகளையும் இடம் பெற செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன்.
அறிக்கை வழங்க வேண்டும்
இந்த அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகியும் மிகவும் பாதுகாப்பாக, உறுதியாக உள்ளது. அணை குறித்து எனக்கு உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தினால் அதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். ஒவ்வொரும் பொறுப்புடன் இருக்க வேண்டும். அப்போது தான் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும். அணையின் சுற்று பகுதியில் சோதனை முறையில் வெடி பொருட்களை வெடிக்க செய்து சோதனை செய்ய வேண்டியது அவசியம்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்ய வேண்டும். அணையின் பாதுகாப்பு தன்மை குறித்து அரசு அறிக்கை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story