ரூ.5 ஆயிரம் கோடியில் 150 தொழிற்பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த முடிவு - அஸ்வத் நாராயண் தகவல்
கர்நாடகத்தில் 150 தொழிற்பயிற்சி நிறுவனங்களை ரூ.5 ஆயிரம் கோடி செலவில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு:
தொழிற்பயிற்சி
சர்வதேச தொழிற்பயிற்சி தினம் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நேற்று பெங்களூருவில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சர்வதேச தொழிற்பயிற்சி தின விழா நாளை (அதாவது இன்று) பெங்களூரு விதான சவுதாவில் நடக்கிறது. இதை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைக்கிறார். முதல்-மந்திரி தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் வேலையற்ற இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 45 பேர் பதிவு செய்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி
இதில் இதுவரை 57 ஆயிரத்து 833 பேர் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இதில் 7,876 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. பிரதமர் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழும் கர்நாடகத்தில் 25 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 16 ஆயிரத்து 375 பேர் பயிற்சியை முடித்துள்ளனர். 1,561 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த தொழிற்பயிற்சி திட்டம் உதவும்.
கர்நாடகத்தில் 150 தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ஐ.டி.ஐ.) ரூ.5 ஆயிரம் கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 20 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு மனித வளங்களை இந்த தொழிற்பயிற்சி நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும். 75 பயிற்சி கூடங்கள் தரம் உயர்த்தப்படும். பயிற்சி கூடங்கள் இல்லாத 75 தொழிற்பயிற்சி நிறுவனங்களில் அத்தகைய பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story