கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் தயார் - பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேட்டி


கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் தயார் - பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 15 July 2021 2:41 AM IST (Updated: 15 July 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் உள்ளது என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

பெங்களூரு:
  
ஏற்பாடுகள் தயார்

  கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் 6 பாடங்கள் 2 பாடங்களாக சுருக்கப்பட்டு 2 நாள் அதாவது வருகிற 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.

  இதற்கான ஏற்பாடுகள் குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தனது துறை அதிகாரிகளுடன் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு சுரேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. மாவட்ட அளவில் கலெக்டர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் நிறைவடைந்து உள்ளன. கொரோனா தடுப்பு விதிமுறைகளை தேர்வு மையங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

குழப்பம் ஏற்படக்கூடாது

  தேர்வு மையங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு முறை குறித்து மாணவர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்த ரீதியிலும் குழப்பம் ஏற்படக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு தேர்வு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் மாதிரி தேர்வை நடத்துவார்கள்.

  கடந்த 2020-ம் ஆண்டை விட தற்போது தேர்வு மையங்களில் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் தங்களின் குழந்தைகளை தேர்வு மையங்களுக்கு தைரியமாக அனுப்ப தயாராக உள்ளனர். எந்த மாணவரும் வாகன வசதி இல்லாமல் தேர்வு மையத்திற்கு வர முடியாத நிலை ஏற்படக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

நுழைவுச் சீட்டு

  மாணவர்கள் தேர்வு நுழைவுச் சீட்டை காட்டி அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த பிறகு தேர்வு அறைகள் சானிடைசர் திரவம் கொண்டு தூய்மைபடுத்தப்படும். தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்பட ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

  கல்வி கட்டணம் செலுத்தாவிட்டாலும் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

Next Story