காமராஜர் சிலையை திறக்கக்கோரி கிராம மக்கள் தர்ணா போராட்டம்
மூலைக்கரைப்பட்டி அருகே காமராஜர் சிலையை திறக்கக்கோரி கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே பருத்திப்பாடு பஞ்சாயத்து சுருளை கிராமத்தில் பீடத்துடன் இருந்த காமராஜர் சிலை பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அங்கு புதிய பீடம் அமைத்து, காமராஜர் சிலை புதிதாக நிறுவப்பட்டது.
இதற்கிடையே காமராஜர் சிலையை புதிதாக நிறுவ அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி வருவாய் துறையினர், அதனை அகற்ற முயன்றனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், புதிய காமராஜர் சிலையை அங்கேயே துணியால் சுற்றி மூடி வைத்துள்ளனர். தொடர்ந்து காமராஜர் சிலையை திறக்க அனுமதிக்குமாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுடன் கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு வழங்கினர்.
இந்த நிலையில் காமராஜர் பிறந்த நாள் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே சுருளை கிராமத்தில் புதிய காமராஜர் சிலைைய திறக்க கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி மற்றும் மூலைக்கரைப்பட்டி போலீசார், அங்கு விரைந்து சென்று, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னர்தான் சிலையை திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், காமராஜர் சிலையை திறக்க அனுமதிக்கக்கோரி, சிலையின் முன்பாக அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த சபாநாயகர் அப்பாவு கிராம மக்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காமராஜர் சிலையை திறக்க விரைவில் அனுமதி பெற்று தருவதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story