அதிக அளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவழைப்பது குறித்து மாமல்லபுரத்தில் நாடாளுமன்ற குழுவினர் ஆய்வு


அதிக அளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவழைப்பது குறித்து மாமல்லபுரத்தில் நாடாளுமன்ற குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 15 July 2021 10:27 AM IST (Updated: 15 July 2021 10:27 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் வரவழைப்பது குறித்து மாமல்லபுரத்தில் நாடாளுமன்ற குழுவினர் சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அதிகாரிகளுடன் புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர்.

மாமல்லபுரம், 

செங்கல்படடு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இந்தநிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மாமல்லபுரத்திற்கு அதிக அளவில் வரவழைத்தல், மாமல்லபுரம் நகரை அழகுபடுத்துதல், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்தல், புராதன சின்ன பகுதிகளில் பூங்காக்கள், செடி கொடிகள் அமைத்தல் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து தெலுங்கானா எம்.பி. டி.ஜி.வெங்கடேஷ் தலைமையில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதில் திருச்சி சிவா எம்.பி., பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்மோடி, நாடாளுமன்ற அலுவலக செயலாளர் நாராயன் உள்ளிட்டோர் இருந்தனர்.

முன்னதாக நாடாளுமன்ற குழுவினரை மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன் ஆகியோர் அர்ச்சுனன் தபசு அருகில் பூங்கொத்து, சால்வைகள் அணிவித்து வரவேற்றனர். பின்னர் அந்த குழுவினர் வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து ஒவ்வொரு புராதன மையத்திலும் அதன் வரலாற்று கதைகளுக்கு ஏற்ப வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் மேம்பாட்டு பணிகளை செய்வது குறித்து சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.

அப்போது வெளிநாட்டு பயணிகளை கவர என்ன மாதிரியான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று உடன் வந்த சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்டு நாடாளுமன்ற குழுவினர் குறிப்பு எடுத்து கொண்டனர்.

நாடாளுமன்ற குழுவினர் புராதன சின்னங்கள் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் தயார் செய்யப்பட்ட மாமல்லபுரம் பல்லவர் கால வரலாற்று சிற்பங்கள் பற்றி வண்ண புகைப்படத்துடன் கூடிய குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.

அப்போது தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் நாயர், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் துரைராஜ், திருவடிசூலம் பைரவர் கோவில் அறங்காவலர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Next Story