மீஞ்சூரில் ‘கவரிங்’ நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.4½ கோடி மோசடி நகை மதிப்பீட்டாளர் கைது
மீஞ்சூரில் ‘கவரிங்’ நகைகளை போலி வாடிக்கையாளர்கள் மூலம் அடமானம் வைத்து ரூ.4½ கோடி மோசடி செய்த வங்கி நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மீஞ்சூர் வள்ளுவர் நகர், முதல் தெருவை சேர்ந்த மேகநாதன் (வயது 47) என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார்.
மேலும் இவர் மீஞ்சூர் பகுதியில் கவரிங் நகைகள் விற்பனை செய்யும் கடையும் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் வங்கிகளில் பணிபுரிந்த கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் போர்வையில் போலி கவரிங் நகைகளை வங்கியில் அடமானம் வைத்துள்ளார்.
பின்னர் நகை மதிப்பீட்டாளரான அவர் சோதனை செய்வது போல் நடித்து போலி நகைகளை உண்மையான நகைகள் என சான்றளித்து மோசடி செய்ததாக தெரிகிறது. இதேபோல் அவர் 400-க்கும் மேற்பட்ட போலி வாடிக்கையாளர்களின் மூலம் பணம் மோசடி செய்துள்ளார்.
இந்தநிலையில் வழக்கம்போல் வங்கியில் அதிகாரிகள் கணக்கு வழக்கு சரிபார்த்து, நகைகளை மதிப்பீடு செய்து தணிக்கை செய்து பார்த்தபோது, வாடிக்கையாளர்கள் மூலம் அடமானம் வைத்து நூதன முறையில் ஏமாற்றி ரூ.4 கோடியே 52 லட்சம் வங்கிக்கு மோசடி செய்தது தெரியவந்தது இதைத்தொடர்ந்து அந்த வங்கியின் சென்னை மேலாளர் பிர்லா பிரசாத் தாஸ், நகை மதிப்பீட்டாளர் மேகநாதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு அசோகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் லில்லி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சூரியகுமார், வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நேற்று மேகநாதனை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story