சென்னை மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


சென்னை மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 15 July 2021 6:12 PM IST (Updated: 15 July 2021 6:12 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு முயற்சிகள் துறையின்கீழ் இயங்கும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் உலகத் தரத்துக்கு இணையான பாதுகாப்புடன் விரைவாக பயணிக்கக்கூடிய வகையில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில், இதுவரை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, சென்னை மக்களின் பயன்பாட்டில் உள்ள முதல் கட்ட பணிகள் மற்றும் அதன் நீட்டிப்பு குறித்தும், இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் முதல் கட்ட நீட்டிப்பில் அறிவிக்கப்பட்ட மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடம் மற்றும் தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான வழித்தட பணிகளை விரைந்து செயல்படுத்திடவும் அவர் அறிவுறுத்தினார். மேலும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2-ன் பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விபு நய்யர், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story