நண்பரை கத்தியால் குத்திய அண்ணன்-தம்பிக்கு 10 ஆண்டு ஜெயில் சென்னை கோர்ட்டு உத்தரவு


நண்பரை கத்தியால் குத்திய அண்ணன்-தம்பிக்கு 10 ஆண்டு ஜெயில் சென்னை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 July 2021 6:17 PM IST (Updated: 15 July 2021 6:17 PM IST)
t-max-icont-min-icon

நண்பரை கத்தியால் குத்திய அண்ணன்-தம்பிக்கு 10 ஆண்டு ஜெயில் சென்னை கோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை ஆர்.ஏ.புரம் அன்னை சத்தியாநகரைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவர், சென்னை கிரீன்வேஸ் ரோடு கேசவபெருமாள்புரத்தைச் சேர்ந்த தனது நண்பர் சதீஷ் (வயது 23) என்பவர் மூலம் மோட்டார்சைக்கிள் வாங்கி உள்ளார். இந்தநிலையில் வாகன சோதனையின்போது நரசிம்மனிடம் மோட்டார்சைக்கிளுக்கான ஆவணங்களை போலீசார் கேட்டுள்ளனர்.

அப்போது சதீஷ் மூலம்தான் மோட்டார்சைக்கிளை வாங்கியதாக போலீசாரிடம் நரசிம்மன் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து சதீஷிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இதன் காரணமாக நரசிம்மன் மீது சதீசுக்கு விரோதம் ஏற்பட்டது.

கடந்த 9.6.2014 அன்று தனது நண்பர் சுந்தர் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த நரசிம்மனை சதீஷ், அவரது சகோதரர் பிரகாஷ் (25) ஆகியோர் வழிமறித்து கத்தியால் குத்தினர். இதில் நரசிம்மன் உள்ளிட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனர். சிகிச்சைக்குப் பின்பு அவர்கள் வீடு திரும்பினர். இதுகுறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை 5-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி டி.வி.ஆனந்த் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் ஏ.டி.நாகேந்திரன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சகோதரர்களான பிரகாஷ், சதீஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி இருவருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story