கம்பம்மெட்டில் கேரள போலீசாரை கண்டித்து ஜீப் டிரைவர்கள் சாலைமறியல்
கம்பம்மெட்டில் கேரள போலீசாரை கண்டித்து ஜீப் டிரைவர்கள் சாலைமறியல் செய்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு ஜீப்களில் தொழிலாளர்களை ஏற்றி செல்வது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் இ-பாஸ், கொரோனா பரிசோதனை சான்று, தடுப்பூசி சான்று இருந்தால் மட்டுமே தொழிலாளர்களை கேரளாவுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.
அதே நேரத்தில் கேரளாவிலிருந்து கம்பம்மெட்டு மற்றும் குமுளி சோதனைச்சாவடி வழியாக தேனி மாவட்டத்திற்கு வருபவர்களை தமிழக போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் இ-பாஸ், கொரோனா சான்று, தடுப்பூசி சான்று போன்றவைகளை கேட்பதில்லை. இது தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்லும் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நேற்று ஜீப் டிரைவர்களான கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த பாலமுருகன் (35), 25-வது வார்டை ேசர்ந்த வேல்முருகன் (33), குமார் (30), சரவணன் (35) ஆகிய 4 பேரும் ஜீப்பில் கம்பம்மெட்டு சாலை வழியாக கேரளாவுக்கு செல்ல முயன்றனர். அவர்களுக்கு கேரள சோதனைச்சாவடியில் உள்ள போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து 4 ஜீப் டிரைவர்களும் தமிழக பகுதிக்கு வந்து கேரள போலீசாரை கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் இருந்த தமிழக போலீசார் ஜீப் டிரைவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு கோரினர். அப்போது கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வர எளிதாக அனுமதி வழங்குகிறீர்கள், ஆனால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்ல அவர்கள் கெடுபிடி காட்டுகின்றனர். தமிழக சோதனைச்சாவடியிலும் கேரளாவில் இருந்து வருபவர்களிடம் கெடுபிடி காட்ட வேண்டும். அதற்காகத்தான் மறியல் போராட்டம் நடத்துகிறோம். போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றார்கள். அப்போது போலீசார், மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இல்லையெனில் கைது செய்வோம் என்று கூறி அவர்களை போராட்டத்தை கைவிட செய்தனர். இதனால் தமிழக-கேரள எல்லையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story