தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்  காமராஜர் பிறந்தநாள் விழா  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 15 July 2021 9:29 PM IST (Updated: 15 July 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. அதையொட்டி அவருடைய சிலைக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனி :
தேனி மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 119-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
அதன்படி தி.மு.க. சார்பில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் நகர பொறுப்பாளர் பாலமுருகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நாராயணபாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர். தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில், காங்கிரஸ் மற்றும் வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
விடுதலை சிறுத்தைகள்-பா.ஜ.க.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில், நகர செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், ஏழை, எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
பா.ஜ.க. சார்பில் நகர தலைவர் விஜயகுமார், தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தமிழ்நாடு நாடார் சங்க மாவட்ட தலைவர் ஜெய்முருகேஷ், மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜன், மாவட்ட செயலாளர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் போடி திருமலாபுரம், கோம்பை, சின்னமனூர் ஆகிய இடங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமையில் காமராஜர் சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. அதுபோல், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் காமராஜர் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.
இந்து நாடார்கள் உறவின்முறை
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு உறவின்முறை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜர் சிலைக்கு உறவின்முறை நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அங்கு ரத்ததான முகாம் நடந்தது. இதில் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள், உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 150 பேர் ரத்ததானம் செய்தனர். காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய மதிய உணவு திட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் தேனியில் 2021 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் உறவின்முறை நிர்வாகிகள், அனைத்து கல்வி நிறுவன செயலாளர்கள், இணைச்செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதுபோல், நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் கல்லூரி செயலாளர் தில்லைக்கனி தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி செயலாளர் காளிராஜ் தலைமையிலும், நாடார் சரசுவதி பப்ளிக் பள்ளியில் பள்ளி செயலாளர் கண்ணன் தலைமையிலும் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. பப்ளிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி 119 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் பள்ளி முதல்வர் சாம்பவி மற்றும் ஆசிரியைகள், தேனி மாவட்ட தன்னார்வலர்கள் குழுவினர் கலந்துகொண்டனர். நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளியில் பள்ளி செயலாளர் பாண்டிக்குமார் தலைமையிலும், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி செயலாளர் மகேஸ்வரன் தலைமையிலும் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.
போடி
போடி திருமலாபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ், முன்னாள் நகர செயலாளர்கள் முகமது பசீர், ராஜா ரமேஷ், தி.மு.க. பிரமுகர்கள் அழகரசன், முத்துமுகமது, ராஜசேகர், நம்பிக்கை நாகராஜன், நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முசாக் மந்திரி, தேனி மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சன்னாசி ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் நகர செயலாளர்கள் அரசகுமாரன், ரவிச்சந்திரன், காந்தி, மதுரை மாவட்ட செயலாளர்கள் முகமது ரசூல், தர்மர், மாவட்ட பிரதிநிதி வி.சந்திரசேகர், நகர பொருளாளர் கோபால், இளைஞரணி ஹைதர்அலி, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலைக்கு நகர தலைவர் அங்குவேல், தேனி மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். போடி நாடார் உறவின்முறை நிர்வாகிகள் சார்பில் உறவின்முறை கட்டிடத்தில் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
உத்தமபாளையம்
காமராஜர் பிறந்தநாளையொட்டி உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, தேவாரம், கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, கோம்பை, தே.சிந்தலைச்சேரி ஆகிய ஊர்களில் காங்கிரசார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கோம்பையில் நடந்த விழாவில் காமராஜர் உருவப்படத்திற்கு உத்தமபாளையம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் முகைதீன் அப்துல்காதர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் கோம்பை நகர் காங்கிரஸ் தலைவர் தாமோதரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
பெரியகுளம், கம்பம்
பெரியகுளம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் தாமரைக்குளத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு பெரியகுளம் வட்டார காங்கிரஸ் தலைவர் ஹம்சா முகமது தலைமை தாங்கினார். பேரூர் கிளை தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், துணைத்தலைவர் நாகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் செயலாளர் பாலையா, பொருளாளர் நடராஜன், நிர்வாகிகள் பெரியசாமி சன்னாசி, பால்பாண்டி, வேலு, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

Next Story