முதியவரின் இறப்பு சான்றிதழ்
திருப்பூரில் கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் இறப்பு சான்றிதழ் தேதியை மாற்றிக்கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் இறப்பு சான்றிதழ் தேதியை மாற்றிக்கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனாவால் முதியவர் சாவு
திருப்பூர் குமார்நகரை அடுத்த வலையங்காடு பாலமுருகன்நகர் 2வது வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 74 இவருக்கு கடந்த மே மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்த்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆறுமுகம் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மே மாதம் 23ந்தேதி காலை அனுமதிக்கப்பட்டார். அங்கு 2 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் 25ந்தேதி அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடலை மாநகராட்சி அதிகாரிகளே உறவினர்கள் முன்னிலையில் ஆத்துப்பாளையம் மின்மயானத்தில் தகனம் செய்தனர்.
இந்த நிலையில் ஆறுமுகத்திற்கு இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக ஆறுமுகத்தின் உறவினர் நடராஜ் அனுப்பர்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 1வது மண்டல அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது 25ந்தேதி இறந்தவர்கள் பட்டியலில் ஆறுமுகம் பெயர் இல்லை. இதையடுத்து நடராஜ் நேற்று திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆறுமுகத்திற்கு இறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக முயற்சி செய்தார். அப்போது அங்குள்ள பட்டியலிலும் அவர் பெயர் இல்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் ஆறுமுகம் இறப்புக்கு முந்தைய நாட்களிலும், பிந்தைய நாட்களிலும் அவர் பெயர் உள்ளதா என்று பார்த்துள்ளார். அப்போது 23ந்தேதி பட்டியலில் ஆறுமுகம் பெயர் இருந்துள்ளது.
இறப்பு சான்றிதழ்
இதை தொடர்ந்து இறப்பு சான்றிதழை வாங்க சென்றபோது, அதிலும் 23ந்தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜ் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் தேதி தவறாக குறிப்பிட்டதற்கு ஒருசில காரணங்களை கூறி சமாளித்த அதிகாரி ஒருவர், கூடுதல் தகவல்களுடன் மீண்டும் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்குமாறு கூறி உள்ளார். மேலும் இறப்பு சான்றிதழ் கிடைக்க 20 நாட்கள் ஆகும் என்றும் கூறியதாக தெரிகிறது.
ஆறுமுகம் மே மாதம் 25ந்தேதி உயிரிழந்துள்ள நிலையில் 2 நாட்கள் முன்பே அதாவது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 23தேதியே இறந்து விட்டார் என்று என்று தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கி உள்ளதால் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் ஆறுமுகம் உயிரிழந்த மனஉளைச்சல் மாறாத நிலையில், அவருடைய இறப்பு சான்றிதழில் குழப்பதை ஏற்படுத்தி, அலைக்கழிப்பது வேதனையாக உள்ளது என்று ஆறுமுகத்தின் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.
---
Image1 File Name : 5098641.jpg
---
Image2 File Name : 5098642.jpg
----
Reporter : M. Balasubramanian Location : Tirupur - Annuparpalayam
Related Tags :
Next Story