ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா
வடமதுரையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
வடமதுரை:
வடமதுரையில், ரூ.3 கோடியே 6 லட்சத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் முன்னிலை வகித்தார். திட்ட இயக்குனர் தினேஷ்குமார் வரவேற்றார்.
விழாவில் எம்.எல்.ஏ. பேசுகையில், தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க கலெக்டர் தலைமையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனைத்தொடர்ந்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை அவர் திறந்து வைத்தார். பின்னர் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
விழாவில் வடமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி, துணைத்தலைவர் தனலட்சுமி கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) குணவதி, வடமதுரை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பையன், நகர செயலாளர்கள் கணேசன் (வடமதுரை), கருப்பன் (அய்யலூர்), மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி இளங்கோ, ஈஸ்வரி பாரதிதாசன், முனியம்மாள் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாண்டி (காணப்பாடி), முனியப்பன் (சுக்காம்பட்டி), ராஜரத்தினம் (கொம்பேறிபட்டி), கவுரி மஞ்சுளாதேவி கணேசன் (புத்தூர்), கோமதி பாலசுப்ரமணியன் (தென்னம்பட்டி), சந்திரா சாமுவேல் (சித்துவார்பட்டி), சந்தோஷ்குமாரி ரவி (பாடியூர்), பத்மா வேல்முருகன் (பிலாத்து), சுகந்தி சண்முகசுந்தரம் (குளத்தூர்), நாராயணன் (பி.கொசவபட்டி), விநாயகன் (சிங்காரக்கோட்டை), சிவசக்தி (மோர்பட்டி) உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரவீந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story