மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்
கேமதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என உளுந்தூர்பேட்டையில் அண்ணாமலை கூறினார்.
உளுந்தூர்பேட்டை,
தமிழக பாஜ.க. தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை அக்கட்சி நியமனம் செய்து அறிவித்துள்ளது. இதையடுத்து அண்ணாமலை இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் பா.ஜ.க. தலைவராக பொறுப்பு ஏற்க உள்ளார். இந்த நிலையில் கோயம்புத்தூரில் இருந்து காரில் அண்ணாமலை சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
வழியில் உளுந்தூர்பேட்டைக்கு வந்த அவருக்கு கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது மாநில செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் அண்ணாமலைக்கு வாள் ஒன்றை பரிசாக வழங்கினார்.
இதையடுத்து அண்ணாமலை தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:- தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. பெட்ரோல் விலை ரூ.5 குறைப்பதாக கூறினார்கள். ஆனால் எப்போது குறையும் என தெரியவில்லை.
நீட் தேர்வு
நீட் தேர்வை பொறுத்தவரை கடந்த ஆண்டு 300 பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் தற்போது மருத்துவம் படித்து வருகிறார்கள். இப்படியிருக்கும்போது நீட் தேர்வு எப்படி ஏழை மக்களுக்கு விரோதமாக இருக்க முடியும்? என்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். அனண கட்டுவது குறித்து தமிழக அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவுதான் எங்களுடைய முடிவு.
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு ஆபத்து என்பதுதான் பா.ஜ.க.வின் கருத்தாகும். இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து பாதிப்பு
முன்னதாக அண்ணாமலையை பார்க்கும் ஆவலில் தொண்டர்கள் பலர் அங்கு திரண்டனர். மேலும் வரவேற்பு நிகழ்ச்சியின் போது ஏராளமான வாகனங்கள் அணிவகுத்ததால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து விழுப்புரத்தில் அண்ணாமலைக்கு பா.ஜ.க.வினர் வரவேற்பு அளித்தனர்.
Related Tags :
Next Story