குடியாத்தம் அருகே உடலை அடக்கம் செய்வதில் தாமதம் ஆனதால் சாலை மறியல்
குடியாத்தம் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் தாமதமானதால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்
சிகிச்சை பலனின்றி சாவு
குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனாவில் இருந்து மீண்டார்.
ஆனாலும் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலையில் இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து சுரேஷ் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி தயார் நிலையில் இருந்தது. இருப்பினும் 3 மணி நேரம் ஆகியும் அரசு வழிகாட்டுதலின்படி உடலை அடக்கம் செய்ய அந்த ஊராட்சி செயலாளர், வருவாய் துறையினர், சுகாதாரத்துறையினர் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனையடுத்து உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அடக்கம் செய்ய வராத அதிகாரிகளை கண்டித்தும் சுரேஷின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று மதியம் திடீரென குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையில் கன்னிகாபுரம் கிராமம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, டவுன் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், முருகன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நெல்லூர்பேட்டை ஊராட்சி செயலாளர் லோகேஷ் உள்ளிட்டோர் உடனடியாக சுரேஷின் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story