விதிமுறைகளை மீறிய 13 சரக்கு வாகனங்கள் பறிமுதல்
விதிமுறைகளை மீறிய 12 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆய்வு பணிக்காக வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் சென்றபோது வெண்கலம் பகுதியில் சரக்கு வாகனத்தில் பயணிகள் ஏற்றி செல்லப்பட்டதை கண்டார். இதையடுத்து கலெக்டர் அந்த சரக்கு வாகனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டார். அதன்படி அந்த சரக்கு வாகனம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமியால் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வவகுமார் ஆகியோர் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஓட்டுனர் உரிமம், தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் சான்று, வரி கட்டிய வில்லை இல்லாமலும், பயணிகளை ஏற்றிச்சென்றதாகவும் 12 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வரி செலுத்தாத 2 பொக்லைன் எந்திரங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது. ஆவணங்கள் இல்லாத கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்சென்றால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story