பெண் கிராம நிர்வாக அலுவலர்- கல்லூரி மாணவியிடம் 6 பவுன் சங்கிலிகள் பறிப்பு


பெண் கிராம நிர்வாக அலுவலர்- கல்லூரி மாணவியிடம் 6 பவுன் சங்கிலிகள் பறிப்பு
x
தினத்தந்தி 15 July 2021 7:25 PM GMT (Updated: 15 July 2021 7:25 PM GMT)

வி.கைகாட்டி அருகே வெவ்வேறு சம்பவங்களில் பெண் கிராம நிர்வாக அலுவலர்- கல்லூரி மாணவியிடம் மொத்தம் 6 பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

வி.கைகாட்டி:

கிராம நிர்வாக அலுவலர்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி அனிதா(வயது 33). இவர் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் அணைக்குடம் சென்ற அவர் பணி முடிந்த பின்னர், இரவு 7 மணி அளவில் ஸ்கூட்டரில் சுத்தமல்லி, விளாங்குடி வழியாக வி.கைகாட்டிக்கு வந்து கொண்டிருந்தார். 
விளாங்குடியை அடுத்த தேளூர் துணை மின் அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், அனிதாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் எடையுள்ள 2 தங்கச்சங்கிலிகளை பறித்துக்கொண்டு ஒரத்தூர் சாலையில் தப்பி சென்றுவிட்டார்.
சங்கிலி பறிப்பு
இதேபோல் வி.கைகாட்டியை அடுத்த குடிசல் தெற்கு தெருவை சேர்ந்த பழனிவேலின் மகள் ரம்யா(22). இவர் தத்தனூர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். பழனிவேல் ரெட்டிப்பாளையம் தனியார் சிமெண்டு ஆலை காலனியில் தங்கி, வேலை பார்த்து வருகிறார். அவருடன் ரம்யா வசித்து வருகிறார். இந்நிலையில் ரம்யா, தனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். தேளூர்-அயன்ஆத்தூர் பிரிவு பாதையில் சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், ரம்யாவின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார்.
இந்த சம்பவங்கள் குறித்து கயர்லாபாத் போலீசில், கிராம நிர்வாக அலுவலர் அனிதா மற்றும் ரம்யா ஆகியோர் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிந்து தப்பி ஓடிய மர்மநபர்களை தேடி வருகிறார். இந்த சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story