3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்: குழந்தையை தாக்கி கொன்றதாக தாய் கைது


3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்: குழந்தையை தாக்கி கொன்றதாக தாய் கைது
x
தினத்தந்தி 16 July 2021 1:15 AM IST (Updated: 16 July 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் குழந்தையை தாக்கி கொன்றதாக தாயை போலீசார் கைது செய்தனர்.

எருமப்பட்டி,

எருமப்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் சூர்யா. இவருடைய மனைவி  கஸ்தூரி (வயது 27). இவர்களுக்கு சிவரஞ்சினி (6), பிரியதர்ஷினி (4) என 2 மகள்கள் உள்ளனர். 

இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த கஸ்தூரிக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் மருத்துவமனையில் யாரிடமும் சொல்லாமல் குழந்தையை எடுத்து சென்று விட்டனர். பின்னர் கடந்த 13.4.2021 அன்று குழந்தை இறந்து விட்டதாக எருமப்பட்டி போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து எருமப்பட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பெற்றோரிடம் விசாரித்தபோது, குழந்தை இறந்து விட்டதால் உடலை புதைத்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பெற்றோரை அழைத்து சென்று குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அங்கேயே பரிசோதனைக்கான உறுப்புகளை எடுத்து கொண்டு மீண்டும் அங்கேயே உடல் புதைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக போலீசார் விசாரணையில் 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் அடைந்த கஸ்தூரி குழந்தையின் தலையில் தாக்கியதில் குழந்ைத இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் நேற்று கஸ்தூரியை கைது செய்தனர். 

Next Story