பெங்களூருவில் இருந்து தஞ்சைக்கு ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 3 பேர் கைது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோ- ஸ்கூட்டர் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து தஞ்சைக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோ மற்றும் ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்:-
பெங்களூருவில் இருந்து தஞ்சைக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோ மற்றும் ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் தீவிர சோதனை
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை நடந்து வருகிறது. இதையடுத்து கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சிறப்பு தனிப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், ஏட்டு இளவரசன், போலீஸ்காரர்கள் கவுதம், ராஜதுரை, ரஞ்சித்குமார் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள்
இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து தஞ்சைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் தஞ்சை மேலவஸ்தாசாவடி ரவுண்டானா அருகே நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தபோது அதில் மூட்டை, மூட்டையாக 2 டன் வரையிலான புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
3 பேர் கைது
இது தொடர்பாக சரக்கு ஆட்டோ டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தை சேர்ந்த கருப்பையா மகன் சூரியகுமார் (வயது 30), மற்றும் புகையிலை பொருட்கள் மொத்த வியாபாரியான புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த பிரபு (36), தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்க்கால் பகுதியை சேர்ந்த காசிராஜன் மகன் அருண்குமார்(27) ஆகிய 3 பேரையும் பிடித்தனர்.
பின்னர் புகையிலை பொருட்களையும் அதை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோ, ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரையும், சரக்கு ஆட்டோ, ஸ்கூட்டர் மற்றும் புகையிலை பொருட்களையும் தனிப்படை போலீசார், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story