கொரோனாவில் இருந்து 236 பேர் குணமடைந்தனர்
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 155 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் சிகிச்சை பெற்று வந்த 236 பேர் குணமடைந்துள்ளதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக 200-க்கும் குறைவாக கொரோனாவின் பாதிப்பு இருந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 164 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று 155 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 40 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 53 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 26 பேரும், நகராட்சி பகுதிகளில் 21 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதுதவிர வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 15 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட கொரோனாவுக்கு 91 ஆயிரத்து 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 236 பேர் குணமடைந்துள்ளதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து 1,823 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சேலத்தை 63 மற்றும் 70 வயதுடைய 2 மூதாட்டிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், 55 வயதுடைய ஆண் ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியிலும் பலியாகினர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,524 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story