2 பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி
பெலகாவி அருகே 2 பிள்ளைகளை கொன்றுவிட் தந்தையும் தற்கொலைக்கு முயன்ற பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.
பெலகாவி:
மாந்தீரிக பொருட்கள்
பெலகாவி அருகே ஏ.பி.எம்.சி. போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கே.எஸ்.கங்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் அனில் (வயது 36). இவரது மனைவி ஜெயா. இந்த தம்பதிக்கு அஞ்சலி (8), அனன்யா (6) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தார்கள். அனில் டைல்ஸ் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் தான் பார்த்து வந்த வேலையை அனில் இழந்தார்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அனிலின் வீட்டின் முன்பு மாயமாந்திரீக பொருட்கள் கிடந்தன. இதனை பார்த்து அனில் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது மனைவி ஜெயா உதவியுடன் வீட்டின் முன்பு கிடந்த மாந்தீரிக பொருட்களை அனில் அகற்றினார். ஆனால் அதன்பின்னர் அனில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டதாக தெரிகிறது.
திண்பண்டத்தில் விஷம்
இந்த நிலையில் நேற்று காலை ஜெயா அப்பகுதியில் வசித்து வரும் தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது வீட்டில் இருந்த அஞ்சலி, அனன்யாவுக்கு திண்பண்டத்தில் விஷத்தை தடவி அனில் கொடுத்து உள்ளார். இதுபற்றி அறியாத அஞ்சலி, அனன்யாவும் அந்த திண்பண்டத்தை சாப்பிட்டு உள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து கையை பிளேடால் அறுத்த அனில், கையில் இருந்து வெளியேறிய ரத்தத்தை வீட்டில் இருந்த சாய்பாபா, சிவன் சிலைகள் மீது விட்டு உள்ளார். பின்னர் அனிலும் திண்பண்டத்தில் விஷம் தடவி சாப்பிட்டு உள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஜெயா, அனில் உயிருக்கு போராடுவதை கண்டும், குழந்தைகள் இறந்து கிடப்பதை பார்த்தும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
கொலை வழக்கு
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அனிலை மீட்டு ஜெயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனிலுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி அறிந்த ஏ.பி.எம்.சி. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஞ்சலி, அனன்யாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஏ.பி.எம்.சி. போலீசார் கொலை, தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அனில் தனது குழந்தைகளை கொன்றதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. வீட்டின் முன்பு மாந்தீரிக பொருட்கள் கிடந்ததால் பயந்து போய் இருந்த அனில் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இருப்பினும் அனில் குழந்தைகளை கொன்றதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெலகாவியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story