திருச்சியில் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியினர்,போலீசார் இடையே தள்ளு முள்ளு
திருச்சிக்கு வருகை தந்த பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியில் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மலைக்கோட்டை,
திருச்சிக்கு வருகை தந்த பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியில் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலைக்கு வரவேற்பு
தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் பொறுப்பேற்க உள்ளார். இதற்காக அவர் கரூரில் இருந்து சென்னை செல்லும் வழியில் திருச்சி வந்தார்.
திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே அவருக்கு திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சியினர் சார்பில் நேற்று வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு அண்ணாமலை வந்ததும், பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடிக்க தயாரானார்கள்.
தள்ளு, முள்ளு
அப்போது போலீசார் பட்டாசு வெடிக்க அனுமதி மறுத்தனர். இதனால் பா.ஜனதா கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு,முள்ளு உண்டானது.
ஆனாலும் பா.ஜனதா கட்சியினர் விடாப்பிடியாக பட்டாசு வெடித்து அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் பெரம்பலூர் வழியாக சென்னை புறப்பட்டு சென்றார். நிகழ்ச்சியில் ஓ.பி.சி. அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சண்முககண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருச்சியில் நிருபர்களுக்கு அண்ணாமலை பேட்டி அளித்த போது கூறியதாவது:-
பொது சிவில் சட்டம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு தமிழக பா.ஜனதா கட்சி எப்போதும் துணை நிற்கும். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் அல்ல. இஸ்லாமியர்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்து, அரசியல் செய்பவர்கள் தான் பொது சிவில் சட்டம் இஸ்லாமுக்கு எதிரானது என்ற கருத்தை பரப்புகின்றனர்.
தமிழகத்திற்கு தேவையான அளவிற்கு அதிகமாகவே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவீத தடுப்பூசியை தி.மு.க.வினரே பெற்று கட்சியினருக்கு செலுத்துகின்றனர். இதன் காரணமாக 30 சதவீத தடுப்பூசி மட்டுமே பொது மக்களை சென்றடைகிறது. தி.மு.க.வினர் இதை மறைத்து பற்றாக்குறை என குறை கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story