ஜாமீனில் வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு


ஜாமீனில் வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 16 July 2021 11:15 AM IST (Updated: 16 July 2021 11:15 AM IST)
t-max-icont-min-icon

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பூந்தமல்லி, 

சென்னை போரூர் ஆர்.ஈ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் மீது போரூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட விஜய், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

நேற்று அதிகாலை போரூர் சிக்னல் அருகே தனது நண்பர்களுடன நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 3 பேர், விஜயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜய்யை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் விஜயின் கை, கால் போன்ற இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், விஜய் உள்பட அனைவரும் அதிகாலையிலேயே அங்குள்ள பாரில் இருந்து மதுபானத்தை வாங்கி ஒன்றாக அமர்ந்து அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் விஜயை வெட்டியது தெரிந்தது. தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

அதேபோல் பெரியமேட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (45). சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி அருகே 2 பேரை பூந்தமல்லிக்கு சவாரி ஏற்றி வந்தார்.

குமணன்சாவடி அருகே வந்தவுடன் ஆட்டோவை நிறுத்தி கீழே இறங்கிய 2 பேரும் திடீரென தங்களிடம் இருந்த கத்தியால் ஆட்டோ டிரைவர் சீனிவாசனை குத்திவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மர்மநபர்கள் எதற்காக ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தினார்கள்? என பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story