கட்டாய கொரோனா பரிசோதனை
அரசு பஸ்சில் பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கிய, அரசு பஸ் கண்டக்டருக்கு திருப்பூரில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்
அரசு பஸ்சில் பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கிய, அரசு பஸ் கண்டக்டருக்கு திருப்பூரில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அரசு பஸ்கள் இயக்கம்
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக திருப்பூர் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது.
இதனால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. கடந்த அறிவிப்பின் போது பஸ் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எச்சிலுடன் பயணச்சீட்டு
இந்த நிலையில் நேற்று காலை கோவையில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் ஒன்று 57 பயணிகளுடன் வந்தது. இந்த பஸ்சில் கண்டக்டராக இருந்த குணசேகரன் வயது 47 பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது, அனைவருக்கும் எச்சில் தொட்டு வழங்கினார். இதில் சிலர் அதிருப்தி அடைந்தனர். இதை பார்த்த பஸ்சில் வந்த பயணிகள், கொரோனா காலகட்டத்தில் இதுபோல எச்சில் தொட்டு பயணச்சீட்டு தர வேண்டாம் என கூறியுள்ளனர்.
அதனை பொருட்படுத்தாமல் கண்டக்டர் மீண்டும், மீண்டும் பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கினார். இதற்கிடையே அதே பஸ்சில் பயணித்த மாநகராட்சி சுகாதாரத்துறை 2ம் நிலை அலுவலர் முருகேசன், சுண்டமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இது தொடர்பாக தகவல் அளித்தார்.
கட்டாய பரிசோதனை
இதனைத்தொடந்து அந்த அரசு பஸ் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு வந்த கண்டக்டருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர் முருகேசன் கூறியதாவது
அரசு பஸ் கண்டக்டர், பயணிகளுக்கு தொடர்ந்து எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கினார். கொரோனா பாதிப்பு முழுவதும் குறையவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தளர்வுகளுடன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் எச்சில் தொட்டு பயணச்சீட்டு கொடுக்க வேண்டாம் என கண்டக்டர் குணசேகரனிடம் தெரியப்படுத்தினோம்.
அவர் தொடர்ந்து அதனை கண்டுகொள்ளாமல் செய்ததால், அவரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் தெரிவித்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள கோவை பஸ் நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பணியில் இருந்து விடுவிப்பு
தினமும் 100-க்கும் மேற்பட்ட மக்களை பஸ்களில் சந்திக்கும் வாய்ப்பு கண்டக்டருக்கு உண்டு. இதில் யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் மூலமாக மற்றவருக்கு பரவும் சூழ்நிலை உள்ளது. இதன்மூலம் மீண்டும் சமூகத்தொற்றுக்கு வாய்ப்பாக மாறும் நிலை ஏற்படும். எனவே மக்களை சந்திக்கும் பொதுத்துறையில் இருப்பவர்கள், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
இது தொடர்பாக கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை, குணசேகரனை பணியில் இருந்து விடுவிக்கவும், தனிமைப்படுத்திக்கொள்ளவும் அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். அவர்களும் பணியில் இருந்து விடுவித்து, தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
-----------
Related Tags :
Next Story