புதிதாக 2,405 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் 110 குழந்தைகளுக்கு தொற்று


புதிதாக 2,405 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் 110 குழந்தைகளுக்கு தொற்று
x
தினத்தந்தி 16 July 2021 7:37 PM IST (Updated: 16 July 2021 7:37 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 2,405 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 110 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 45 ஆயிரத்து 663 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,356 ஆண்கள், 1,049 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 405 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 256 பேரும், தஞ்சாவூரில் 163 பேரும், ஈரோட்டில் 159 பேரும், சேலத்தில் 155 பேரும், சென்னையில் 148 பேரும், திருப்பூரில் 143 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறைந்தபட்சமாக தென்காசியில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 346 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

49 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரத்து 860 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 77 ஆயிரத்து 644 ஆண்களும், 10 லட்சத்து 51 ஆயிரத்து 124 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 25 லட்சத்து 28 ஆயிரத்து 806 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 92 ஆயிரத்து 24 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 64 ஆயிரத்து 471 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 38 பேரும், தனியார் மருத்துவமனையில் 11 பேரும் என 49 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 7 பேரும், கோவையில் 6 பேரும், செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருப்பத்தூரில் தலா 2 பேரும் உள்பட நேற்று மட்டும் 21 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 13 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 33 ஆயிரத்து 606 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

73,872 படுக்கைகள் காலி

தமிழகத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் 4 ஆயிரத்து 166 பேரும், ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகளில் 2 ஆயிரத்து 903 பேரும், ஐ.சி.யு படுக்கைகளில் 2 ஆயிரத்து 27 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று 40 ஆயிரத்து 357 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 215 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 300 ஐ.சி.யு படுக்கைகள் என மொத்தம் 73 ஆயிரத்து 872 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது.

3,006 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,006 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 432 பேரும், சென்னையில் 148 பேரும், செங்கல்பட்டில் 194 பேரும், ஈரோட்டில் 219 பேரும், திருப்பூரில் 134 பேரும், சேலத்தில் 236 பேரும் அடங்குவர். இதுவரையில் 24 லட்சத்து 65 ஆயிரத்து 250 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 29 ஆயிரத்து 950 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story