திண்டுக்கல்லில் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை
திண்டுக்கல்லில் புதிய உச்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.13-க்கு விற்றது.
திண்டுக்கல்:
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. அதேநேரம் விலை குறையாமல் தினமும் சிறிது, சிறிதாக விலை உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முதலில் கொடைக்கானலிலும், அதையடுத்து நத்தம் மற்றும் திண்டுக்கல்லிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. அதன் பின்னரும் தினமும் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.13 ஆக உயர்ந்தது. அதேபோல் டீசல் ரூ.95.29-க்கு விற்றது. இது அடுத்து வரும் நாட்களில் மேலும் விலை உயரும் என்று கூறப்படுகிறது. இது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
விலைவாசி அதிகரிப்பு
இன்றைய சூழலில் சாதாரண கூலி தொழிலாளர்கள் இருசக்கர வாகனத்தில் தான் வேலைக்கு செல்கின்றனர். இதனால் அன்றாட செலவு அதிகரிப்பதால், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பின்னடைவு ஏற்படுகிறது. மேலும் வியாபாரிகள் காய்கறி, மளிகை பொருட்களை வாகனங்களில் சென்று தான் வாங்கி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டியது ஏற்படுகிறது. ஒட்டுமொத்தமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை துரத்தும் துயரமாக மாறி இருக்கிறது.
Related Tags :
Next Story