அய்யலூர் ஆட்டுச்சந்தையில் சூதாடிய 2 பேர் கைது
அய்யலூர் ஆட்டுச்சந்தையில் சூதாட்டம் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே ஆட்டுச்சந்தைக்கு பெயர் பெற்ற ஊர் அய்யலூர். இங்கு வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வரும் விவசாயிகள், வியாபாரிகளை குறித்து வைத்து சூதாட்டம் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அய்யலூரில் வழக்கம்போல் ஆட்டுச்சந்தை நடைபெற்றது.
அப்போது மர்ம நபர்கள் சிலர், டோக்கன் வைத்து சூதாட்டம் நடத்தினர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சூதாட்டத்தால் சந்தைக்கு வரும் விவசாயிகள், ஆடுகளை விற்பனை செய்த பணத்தை இழந்துவிட்டு வெறுங்கையுடன் வீடு திரும்புவதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அய்யலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்த சலீம்சேட் (வயது 42), வேங்கனூரை சேர்ந்த வெள்ளையன் (69) ஆகிய 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து, சலீம்சேட், வெள்ளையன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த காஜாமைதீனை (55) போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story