திண்டுக்கல் மாவட்டத்துக்கு மேலும் 22 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்
திண்டுக்கல் மாவட்டத்துக்கு மேலும் 22 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடக்கிறது. அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளில் முகாம் நடத்தியும் தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.
இதற்கிடையே சுற்றுலா தலங்களான பழனி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும்படி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்துக்கு கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகின்றன. அதன்படி நேற்று 20 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,920 கோவேக்சின் தடுப்பூசிகளும் என ஒதுக்கப்பட்டன. இதில் திண்டுக்கல்லுக்கு 10 ஆயிரம் கோவிஷீல்டு, 1,120 கோவேக்சின் மற்றும் பழனிக்கு 10 ஆயிரத்து 500 கோவிஷீல்டு, 800 கோவேக்சின் வழங்கப்பட்டது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் 29 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 399 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கோவேக்சின் தடுப்பூசியை பொறுத்தவரை 2-வது டோஸ் மட்டும் செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 90 ஆயிரத்து 348 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 73 ஆயிரத்து 491 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story