பக்ரீத் பண்டிகையையொட்டி வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
வேப்பூர்,
வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வார சந்தையில் வேப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்காக ஓட்டி வருவது வழக்கம்.
இந்த ஆடுகளை சென்னை, தேனி, புதுச்சேரி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பெரிய நகரங்களில் இருந்தும் மொத்தமாக வியாபாரிகள் வந்து வாங்கிச்செல்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக வாரச்சந்தை நடைபெறவில்லை.
இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 21-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி நேற்று வேப்பூர் வாரச்சந்தைக்கு வியாபாரிகளும், விவசாயிகளும் திரண்டனர். இதனால் ஆடுகளின் விலை வழக்கத்தை விட கூடுதலான விலைக்கு விற்பனை ஆனது. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளிமாவட்ட வியாபாரிகளும் வந்து போட்டி போட்டு ஆடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.
ரூ.3 கோடிக்கு விற்பனை
கொரோனா ஊரடங்கு காரணமாக வாரச்சந்தை நடைபெற தடை விதிக்கப்பட்டிருந்ததால், நேற்று முன்தினம் இரவு முதலே வேப்பூர் போலீசார், கூட்டம் கூடுவதை தவிர்த்து வந்தனர். இருப்பினும் விவசாயிகளும், வியாபாரிகளும் அருகில் உள்ள வயல்வெளி பகுதி, மற்றும் வேறு சில பகுதிகளில் ஆடுகளை நிறுத்தி வியாபாரம் செய்தனர். நேற்று மட்டும் வேப்பூர் வாரச்சந்தையில் 1,000 ஆடுகளுக்கு மேல் விற்பனையானது. இதில் அதிகபட்சமாக ஒரு ஆடு 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதாகவும், நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாகவும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story