ஆள்மாறாட்டத்தில் தொழிலாளி படுகொலை


ஆள்மாறாட்டத்தில் தொழிலாளி படுகொலை
x

செல்போனால் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் வாசுதேவன்(வயது 21). இவரும், அதே ஊரை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுகுமார்(27) என்பவரும் நண்பர்கள். 
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுகுமார், வாசுதேவனின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டார். இதுபற்றி அறிந்த வாசுதேவன், செல்போனை கேட்டபோது ரூ.100 கொடுத்தால் தான் தருவேன் என்று சுகுமார் கூறி உள்ளார். 

செல்போனால் பிரச்சினை 

இதனை தொடர்ந்து கண்ணன் நேரில் சென்று செல்போனை கேட்டபோது, ரூ.1000 கொடுத்தால்தான் தருவேன் என்று சுகுமார் திட்டவட்டமாக கூறி உள்ளார். இந்த பிரச்சினை தொடர்பாக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு, அந்த செல்போன் வாசுதேவனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுகுமார், கண்ணனை மிரட்டிவிட்டு சென்றார். 
கண்ணன் தினமும் இரவு, அதே ஊரைச் சேர்ந்த செல்லதுரை என்பவரது வீட்டு திண்ணையில்தான் படுத்து தூங்குவார். ஆனால் நேற்று முன்தினம் இரவு அந்த திண்ணையில் அதே ஊரைச்சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம்(65) என்பவர் தூங்கிக்கொண்டிருந்தார்.

அடித்துக் கொலை 

அப்போது அங்கு வந்த சுகுமார், திண்ணையில் தூங்கிக்கொண்டிருப்பது கண்ணன் என்று நினைத்து ஆறுமுகத்தை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் ஆறுமுகம் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் சுகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 
இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன், தனிப்பிரிவு அரிராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story