கூட்டுறவு சங்கம் முன்பு பால் கேன்களுடன் உற்பத்தியாளர்கள் போராட்டம்
சின்னசேலம் அருகே கூட்டுறவு சங்கம் முன்பு பால் கேன்களை வைத்து உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சின்னசேலம்
2 நாள் விடுமுறை
சின்னசேலம் அடுத்த தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். தினசரி தேவைக்கு அதிகமாக பால் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுவதால் கூட்டுறவு சங்கத்துக்கு மாதத்தில் 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட 2 நாட்களும் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பாலை கொள்முதல் செய்ய முடியாததால் அவர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
போராட்டம்
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று உற்பத்தியாளர்கள் கேன்களில் பால் எடுத்து வந்தனர். ஆனால் கூட்டுறவு சங்கம் மூடப்பட்டிருந்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் பால் கேன்களை சங்க அலுவலகத்தின் முன்பு வரிசையாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கூட்டுறவு சங்க மேற்பார்வையாளர் ஜெயவேலனை வரவழைத்து பால் கொள்முதல் செய்யப்பட்டது.
பரபரப்பு
பின்னர் அவர் கூறும்போது, தேவைக்கு அதிகமாக பால் வரத்து இருப்பதால் 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை விட வேண்டிய சூழ்நிலை இருப்பதாக தெரிவித்தார். இதனால் விடுமுறை நாட்களில் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்ய மாற்று வழியை எற்படுத்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கொள்முதல் செய்யக்கோரி பால் கேன்களுடன் கூட்டுறவு சங்கத்தின் முன்பு உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்திய சம்பவத்தால் தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story