செஞ்சி வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை


செஞ்சி வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 16 July 2021 10:37 PM IST (Updated: 16 July 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதனை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கிச்சென்றனர்.

செஞ்சி, 

செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் பிரபலமானது கருவாடும், ஆடுகளும்தான். ஏனெனில் நன்றாக காய்ந்த கருவாடுகளும், இறைச்சிக்கு என்ற தனி சுவை கொண்ட ஆடுகளும், வியாபாரிகளுக்கு ஏற்ற விலையில் கிடைக்கும். இதனால் சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் நேரில் வந்து ஏராளமான ஆடுகளை வாங்கிச்செல்வார்கள். அதுவும் முஸ்லிம்கள் கொண்டாடும் பக்ரித் பண்டிகையின் முந்தைய வாரச்சந்தை செஞ்சியில் களைகட்டும். 

ரூ.4 கோடிக்கு விற்பனை 

அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 21-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செஞ்சியில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் விற்பனைக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் கொண்டு வரப்பட்டன. இதனை வாங்குவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் குவிந்தனர். அதிகாலை 4 மணியில் இருந்தே ஆடுகள் விற்பனை நடைபெற்றதால் வாரச்சந்தை களைகட்டியது. இதில் வியாபாரிகள் போட்டி, போட்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர். நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யபட்டது. இதன் மூலம் ரூ.4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story