மீனாட்சி நகரில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று கலெக்டர் ஆய்வு


மீனாட்சி நகரில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 July 2021 10:41 PM IST (Updated: 16 July 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ் மீனாட்சி நகரில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த புட்லூரில் ஏரி உள்ளது. இங்கு திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலமாக பெறப்படும் கழிவு நீரானது மீனாட்சி நகரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரானது ஏரியில் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக ஏரியில் கழிவுநீர் கலந்து நீர் மாசுபடுகிறது. மேலும் நிலத்தடி நீரும் மாசுபடும் நிலை உள்ளது. இந்த நிலையில் புட்லூர் ஏரியில் விடப்பட்டிருந்த மீன்கள் கடந்த 2 நாட்களாக செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சியில் சுத்திகரிக்கப்படும் கழிவுநீரை புட்லூர் ஏரியில் விடுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ் மீனாட்சி நகரில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த சுத்திகரிப்பு நிலைய தொட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும் விதமாக அங்கு மற்றொரு தொட்டியை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அவருடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் வேல்முருகன், நகராட்சி பொறியாளர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர் அமுதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story