திருக்கோவிலூர் தியாகதுருகத்தில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் நகை பணம் கொள்ளை


திருக்கோவிலூர் தியாகதுருகத்தில்  2 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் நகை பணம் கொள்ளை
x
தினத்தந்தி 16 July 2021 10:46 PM IST (Updated: 16 July 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் தியாகதுருகத்தில் தனியார் கம்பெனி ஊழியர் உள்பட 2 பேரின் வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

திருக்கோவிலூர்

தொழிலாளி

திருக்கோவிலூர் அருகே உள்ள மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 44). தொழிலாளியான இவர் நேற்று காலை வழக்கம்போல் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவியும் 100 நாள் திட்டத்தில் வேலைக்கு சென்று விட்டார். 
பின்னர் மாலையில் விடு திரும்பிய தண்டபாணியின் மனைவி வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கசங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. 

மர்மநபர்கள் கைவரிசை

கணவன், மனைவி வீ்ட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த மேற்கண்டநகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் வழக்கு பதிவுசெய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் தொழிலாளியின் வீட்டில் புகுந்து நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் திருக்கோவிலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
அதேபோல் தியாகதுருத்தில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

தனியார் கம்பெனி ஊழியர்

தியாகதுருகம் புக்குளம் மந்தவெளி தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் வினோத்குமார்(வயது 28). இவர் பெங்களூருவில் உள்ள கார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இதனால் இவரது மனைவி பிரபா(21), தாய் தாட்சாயிணி(53) ஆகியோர் வீட்டில் இருந்து வருகின்றனர். வினோத்குமார் அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார்.
இந்த நிலையில் மாமியார், மருமகள் இருவரும் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு விருத்தாசலம் அருகே தொரவளூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தோடு, சங்கிலி, காசு உள்ளிட்ட 3 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி குத்து விளக்கு, கொலுசு மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

வலைவீச்சு

பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தாட்சாயிணி இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தியாகதுருகம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். 
தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் புகுந்து நகை-பணத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story