திறப்பு விழா கண்ட ஒரு மணி நேரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிய ஒப்பந்ததாரர் நிலுவைத்தொகை வழங்காததால் ஆத்திரம்
பென்னாகரம் அருகே திறப்பு விழா கண்ட ஒரு மணி நேரத்தில் நிலுவைத்தொகை வழங்காததால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பென்னாகரம்:
ஊராட்சி மன்ற அலுவலகம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் வட்டுவனஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. மேலும் குறுகிய இடமாக உள்ளதால் கூட்டங்கள் நடத்துவதிலும், உள்ளாட்சி பணிகள் மேற்கொள்வதிலும் இடர்பாடுகள் நிலவி வந்தது. இதனால் வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பி.கோடுபட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதையொட்டி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2017-2018-கீழ் ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் மாதம்மாள் கோவிந்தசாமி கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் முறையிட்டார்.
திறப்பு விழா-பூட்டு
இதையொட்டி 2 முறை திறப்பு விழாவிற்கு தயார் செய்தும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படவில்லை. இதனால் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறக்க ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று புதிய அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர் மாதம்மாள் கோவிந்தசாமி திறந்து வைத்தார்.
நிலுவைத்தொகையை வழங்காமல் ஊராட்சி மன்ற அலுவலகம் திறந்ததால் ஆத்திரம் அடைந்த கட்டிட ஒப்பந்ததாரர் செல்வம் அங்கு வந்து அலுவலகத்தை 2 பூட்டுகள் போட்டு பூட்டினார். பின்னர் ஒப்பந்ததாரர் கூறுகையில், புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டியதில் தனக்கு ரூ.6 லட்சம் வரை பாக்கி உள்ளது. இதனால் நிலுவைத்தொகையை அதிகாரிகள் வழங்கிய பிறகே அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று கூறினார். திறப்பு விழா கண்ட ஒரு மணி நேரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story