வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வாய்க்கால்களை தூர்வாரும் பணி தீவிரம்


வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வாய்க்கால்களை தூர்வாரும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 16 July 2021 10:55 PM IST (Updated: 16 July 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளப்பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கூடலூர்

கூடலூர் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளப்பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

வெள்ள பாதிப்புகள்

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கனமழை பெய்யும் போது கூடலூர் பகுதியில் உள்ள புத்தூர்வயல், தேன்வயல், தொரப்பள்ளி, இருவயல் ஆதிவாசி கிராமங்கள் உள்பட பல இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூடலூர் அருகே பாடந் தொரை பகுதியில் மழையால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. 

இதைத்தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் பாடந்தொரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆற்று வாய்க்கால்களை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனால் தற்போது அங்கு மழைநீர் சீராக வழிந்தோடி வருகிறது. 

தூர்வாரும் பணி 

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதன் காரணமாக தொரப்பள்ளி இருவயல் ஆதிவாசி கிராமத்தில் உள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் உள்ள ஆற்று வாய்க்கால்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 

இதேபோல் பல இடங்களில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, கூடலூர் பகுதியில் ஆற்று வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடை பெற்று வருகிறது.

 இதனால் பலத்த மழை பெய்தாலும் ஊருக்குள் வெள்ளம் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர். 


Next Story