வேலூரில் முன்விரோத தகராறில் பெட்ரோல் ஊற்றி மோட்டார் சைக்கிள் எரிப்பு


வேலூரில் முன்விரோத தகராறில்  பெட்ரோல் ஊற்றி மோட்டார் சைக்கிள் எரிப்பு
x
தினத்தந்தி 16 July 2021 10:57 PM IST (Updated: 16 July 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் முன்விரோத தகராறில் பெட்ரோல் ஊற்றி மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

சேறு பட்டதால் தகராறு

வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் கலீல் (வயது 27), கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளுக்கு அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே தெருவில் தேங்கி நின்ற மழைநீரில் மோட்டார் சைக்கிள் சென்றபோது டயரில் இருந்து தெறித்த சேறு,  அந்தப்பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த பயாஸ் என்பவருடைய முகத்தில் பட்டதாக கூறப்படுகிறது.

அதனால் கலீல் மற்றும் பயாஸ் அவருடைய நண்பர்கள் அப்ரோஸ், அப்துல்லா ஆகியோருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த கலீல் திடீரென பயாஸை தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். முகத்தில் சேற்றை அடித்து விட்டு, அதனை தட்டி கேட்ட தன்னையும் தாக்கிய கலீல் மீது பயாஸ் ஆத்திரமும் கொண்டார்.

மோட்டார் சைக்கிள் எரிப்பு

இதற்கிடைய கலீல் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு முதல்மாடியில் உள்ள அவருடைய வீட்டுக்கு சென்றுவிட்டார். அதே வீட்டின் கீழ்பகுதியில் எலக்ட்ரானிக் கடையில் பணிபுரியும் நகீம் (30) என்பவர் வசித்து வந்தார். அவருடைய மோட்டார் சைக்கிளும் அந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் பயாஸ், அப்ரோஸ், அப்துல்லா ஆகியோர் கலீல் வீட்டின் முன்பு வந்து கலீலை வீட்டை விட்டு வெளியே வரும்படி சத்தம் போட்டனர். அவர்கள் கலீலின் மோட்டார் சைக்கிளை எரிப்பதற்காக கையில் பெட்ரோல் பாட்டில் கொண்டு வந்திருந்தனர்.

வெகுநேரமாகியும் கலீல் வீட்டை விட்டு வெளியே வராததால் தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த கலீல் மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக நகீமின் மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில், மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. பின்னர் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதனை கலீல் வீட்டில் எரிந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயாஸ் (27), ஆட்டோ டிரைவர் அப்ரோஸ் (24), அப்துல்லா (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கலீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சைதாப்பேட்டை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், பாட்டிலில் சிறிதளவு பெட்ரோல் இருக்கும்போது தீ வைத்து அதனை கலீல் வீட்டில் 3 பேரும் எறிந்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று தெரிவித்தனர்.

Next Story