ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைவு


ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைவு
x
தினத்தந்தி 16 July 2021 11:13 PM IST (Updated: 16 July 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைவு

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 

இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.  

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் சிறு, குறு விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். 

அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர்.

ஊட்டியில் தொடர் மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராகியும், காய்கறிகளை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் சில இடங்களில் உருளைக்கிழங்கு அறுவடை செய்யாமல் விடப்பட்டது. 

தொடர் மழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்து உள்ளது. 

விளைநிலங்களில் மண் தொடர்ந்து ஈரப்பதமாக இருப்பதால் காய்கறிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. காய்கறிகள் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வருகிறது. 

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

ஊட்டி நகராட்சி மார்க்கெட் மண்டிகளுக்கு தினமும் 10 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தொடர் மழையால் 5 டன் காய்கறிகள் மட்டுமே வருகிறது. 

வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலை சற்று உயர்ந்து உள்ளது. மொத்த விலையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.45 முதல் ரூ.50, ரூ.30-க்கு விற்பனையான பீன்ஸ் ரூ.50 ஆக உயர்ந்து இருக்கிறது. 

கேரட் ரூ.50 முதல் ரூ.55, பீட்ரூட் ரூ.35, நூல்கோல், டர்னீப் ரூ.30 முதல் ரூ.40, பட்டாணி ரூ.130, முட்டைகோஸ் ரூ.8-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தொடர் மழையால் காய்கறிகள் அழுகி சேதம் அடைவதால் வரத்து குறைந்து உள்ளது. வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் சில காய்கறிகள் அழுகி வருகின்றன. வரத்து குறைவால் காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது.

 இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story