வளர்ச்சி பணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடியை பயன்படுத்தவில்லை-கவுன்சிலர்கள் புகார்


வளர்ச்சி பணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடியை பயன்படுத்தவில்லை-கவுன்சிலர்கள் புகார்
x
தினத்தந்தி 16 July 2021 11:16 PM IST (Updated: 16 July 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடியை பயன்படுத்தவில்லை என்று கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடியை பயன்படுத்தவில்லை என்று கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

ஒன்றியக்குழு கூட்டம்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தலைமையில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உமா மகேஸ்வரி மற்றும் பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் நதியா பேசும் ேபாது, சிவகங்கை ஒன்றியத்தில் கடந்த 6 மாதமாக கூட்டம் நடைபெறவே இல்லை. இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தினசரி மக்கள் எங்களிடம் ஏராளமான குறைகளை கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் யாரிடம் சென்று கூறுவது என்று தெரியவில்லை. அலவாகோட்டையிலிருந்து கீழப்பூங்குடி செல்லும் வழியில் பாலம் ஒன்று கட்டுகிறார்கள். அது சரியான முறையில் கட்டவில்லை. அந்த பாலத்தில் தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்படும். இதை யார் கட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. மிகவும் சிரமப்பட்டு அந்த பணியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளோம். எனவே எந்த பணி நடந்தாலும் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

தண்ணீர் திறக்க கோரிக்கை

இதேபோல் ஒன்றிய கவுன்சிலர் கருப்பன் பேசும் ேபாது, முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பவேண்டும். மேலும் பெரியார் பாசன திட்டத்தில் மேலூர் கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கும் போதே சிவகங்கை மாவட்டத்திற்கும் தண்ணீர் திறக்க வேண்டும். இந்த மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும். மருத்துவ கல்லூரி வளாகத்தில் செயல்படும் அம்மா உணவகத்தை மருத்துவக் கல்லூரி நிர்வாகமே நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்றார்.

நிதியை பயன்படுத்தவில்லை

ஒன்றிய கவுன்சிலர்கள் கோவிந்தராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கூறும் போது, வளர்ச்சி பணிக்காக ரூர்பன் திட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்திற்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டது. ஆனால் உரிய முறையில் நாம் அதை பயன்படுத்தாததால் மீண்டும் அந்த தொகை ஊரக வளர்ச்சி முகமைக்கே சென்றுவிட்டது. சிவகங்கை ஒன்றியத்தில் ஏற்கனவே 109 ஒப்பந்தக்காரர்கள் பதிவுசெய்துள்ளனர். தற்பொழுது மேலும் 13 ஒப்பந்தக்காரர்கள் பதிவு செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றிய பகுதியை சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள் இருந்தால் மட்டுமே பணி செய்ய முடியும். வேறு இடங்களை சேர்ந்தவர்களை இங்கே பதிவு செய்வது தேவையற்றது. என்றனர். தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

Next Story